தற்போது இக்கோயில் 'ஆரன்முளா பார்த்தசாரதி கோயில்' என்றும், 'அர்ஜீனன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. பாரதப் போரில் கர்ணனது தேரின் இடது சக்கரம் பூமியில் புதைந்தபோது, அதை தூக்க முயன்றுக் கொண்டிருந்தபோது, அர்ஜீனன் அவன் மேல் அம்பு எய்துக் கொன்றார். நிராயுதபாணியாக நின்ற அவனைக் கொன்ற பாவம் தீர இவ்விடம் வந்து இந்தக் கோயிலை ஜீர்ணோத்தாரணம் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. எனவே 'அர்ஜீனன் அம்பலம்' என்று பெற்றது.
ஒருசமயம் மதுகைடபர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக் கொண்டு சென்று விட்டனர். அதனால் படைப்புத் தொழிலை செய்யமுடியாமல் இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாவிஷ்ணுவை வேண்டித் தவம் செய்தார். பகவான் காட்சி தந்து பிரம்மதேவனுக்கு மீண்டும் சிருஷ்டி ஞானத்தை அளித்த ஸ்தலம்.
மூலவர் திருக்குறப்பன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு பத்மாசினி நாச்சியார் என்பது திருநாமம். பிரம்மாவுக்கும், வேதவியாசருக்கும் பெருமாள் பிரத்யக்ஷம்.
கோயிலை ஒட்டி பம்பா நதி ஓடுகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமியின் ஆபரணங்கள் இக்கோயிலில்தான் வைக்கப்பட்டு உள்ளது. மகரஜோதியன்று அவை இங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|